பாக்சிங் டே டெஸ்ட்: சதம் விளாசினார் நிதிஷ் குமார் ரெட்டி
|இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
மெல்போர்ன்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடிலெய்டில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. பிரிஸ்பேனில் நடந்த 3-வது டெஸ்ட் மழையின் பாதிப்பால் 'டிரா' ஆனது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 474 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 46 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் எடுத்திருந்தது. இந்தியா தரப்பில் பண்ட் 6 ரன்னுடனும், ஜடேஜா 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டம் தொடங்கிய சில மணி நேரத்திலேயே பண்ட் 28 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து ஜடேஜாவும் 17 ரன்னில் அவுட் ஆனார்.
இதனால் இந்தியா 222 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்தியா பாலோ ஆனை தவிர்க்க வேண்டும் என்றால் 275 ரன் எடுக்க வேண்டும் என்ற நிலையில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதிஷ் ரெட்டி இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இறுதியில் இந்த இணை 275 ரன்களை கடக்க உதவியது. இதன் காரணமாக இந்தியா பாலோ ஆனை தவிர்த்தது.
தொடர்ந்து ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் சுந்தர் 50 ரன்னிலும், அடுத்து வந்த பும்ரா ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். மறுபுறம் நிதானமாக ஆடி வந்த நிதிஷ் குமார் ரெட்டி சதம் அடித்து அசத்தினார். சர்வதேச கிரிக்கெட்டில் இது அவரது முதல் சதமாகும். இதையடுத்து மழை பெய்ததன் காரணமாக ஆட்டம் முடிக்கப்பட்டது.
இறுதியில் 3ம் நாள் முடிவில் இந்தியா 116 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 358 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா தரப்பில் நிதிஷ் குமார் 105 ரன்னுடனும் , சிராஜ் 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இன்னும் 116 ரன்கள் பின்னிலையில் உள்ளது. நாளை 4ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.