பாக்சிங் டே டெஸ்ட்; இந்தியா சுழற்பந்து வீச்சை சரியாக பயன்படுத்தவில்லை - ரவி சாஸ்திரி
|இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
மெல்போர்ன்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடிலெய்டில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. பிரிஸ்பேனில் நடந்த 3-வது டெஸ்ட் மழையின் பாதிப்பால் 'டிரா' ஆனது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 86 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்திருந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டீவ் சுமித் 68 ரன்களுடனும், கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.
இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா தொடர்ந்து பேட்டிங் செய்தது. அபாரமாக ஆடிய ஸ்மித் சதம் அடித்து அசத்தினார். மறுபுறம் கம்மின்ஸ் 49 ரன், ஸ்டார்க் 15 ரன் எடுத்து அவுட் ஆகினர். நிதானமாக ஆடி வந்த ஸ்மித் 140 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 122.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 474 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை ஆடி வருகிறது. இன்றைய 2வது நாளில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி சீக்கிரம் ஆல் அவுட் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல பும்ரா ஒருபுறம் கட்டுப்பாட்டுடன் பந்து வீசிய நிலையில் எதிர்புறம் சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோர் சுமாராக பந்து வீசி ரன்களை கொடுத்தார்கள்.
அதே போல ரோகித் சர்மாவும் ஸ்பின்னர்களை சரியாக பயன்படுத்தாமல் சுமாராக கேப்டன்ஷிப் செய்தார். இது தொடர்பாக ரவி சாஸ்திரி தனது கருத்துகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்திய அணி ஐடியா இல்லாமல் ஓடுகிறது. பவுலிங் சுமாராகவே இருக்கிறது. சுழற்பந்து வீச்சை பயன்படுத்த வேண்டிய அளவுக்கு பயன்படுத்தப்படவில்லை. 40 ஓவர்கள் பின்பு தான் ஜடேஜா,வாஷிங்டன் சுந்தர் வருகின்றனர். ஒருவேளை நீங்கள் 2 ஸ்பின்னர்களை நம்பாவிட்டால் எதற்காக அணியில் தேர்ந்தெடுத்தீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.