பாக்சிங் டே டெஸ்ட்; 2வது இன்னிங்ஸில் ரோகித் ரன் எடுக்கவில்லை என்றால்... - மார்க் வாக் கருத்து
|இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது
மெல்போர்ன்,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் முறையே ஆஸ்திரேலியா 474 ரன்களும், இந்தியா 369 ரன்களும் அடித்தன.
இதனையடுத்து 105 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 4-வது நாள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் அடித்துள்ளது. லயன் 41 ரன்களுடனும் (54 பந்துகள்), ஸ்காட் போலன்ட் 10 ரன்களுடனும் (65 பந்துகள்) களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா இதுவரை 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்த தொடரில் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் மிகப்பெரிய விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. மேலும், அவரது பேட்டிங்கும் சிறப்பாக இல்லை. இந்நிலையில், மெல்போர்ன் டெஸ்டில் இந்தியாவின் 2வது இன்னிங்ஸில் ரோகித் ரன் அடிக்கவில்லை எனில் நான் அவரை சிட்னி டெஸ்டுக்கு அழைத்துக் கொண்டு செல்ல மாட்டேன் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மார்க் வாக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ரோகித் ரன்கள் எடுக்கவில்லை என்றால் நான் அவரை சிட்னி டெஸ்டுக்கு அழைத்துக் கொண்டு செல்ல மாட்டேன். இதுவரை உங்களுடைய சேவைக்கு நன்றி என அவரை நான் டிராப் செய்து விடுவேன். மேலும் நாங்கள் சிட்னிக்கு பும்ராவை கேப்டனாக கொண்டு செல்கிறோம், இது உங்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவு என செலெக்டராக இருந்தால் கூறி விடுவேன்.
ரோகித் சர்மாவின் கடைசி 14 இன்னிங்ஸ் சராசரி வெறும் 11 ரன்கள் மட்டுமே ஆகும். எனவே அவர் தனது சிறந்த நிலைகளை கடந்து மிகவும் சுமாராக மாறிவிட்டார் என்பது வெளிப்படையாக தெரிகிறது. இது அனைத்து வீரர்களுக்கும் நடக்கும். எந்த சிறந்த வீரரும் இதை கடக்காமல் இருக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.