பரபரப்பின் உச்சத்தில் பாக்சிங் டே டெஸ்ட்.. கடைசி விக்கெட்டை வீழ்த்த தடுமாறும் இந்தியா
|ஆஸ்திரேலியா இதுவரை 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
மெல்போர்ன்,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக நடைபெற்று வரும் இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் சுமித் 140 ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 119. 3 ஓவர்களில் 369 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 114 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ், லயன் மற்றும் போலந்து ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் 105 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா ஆரம்பம் முதலே இந்திய பந்துவீச்சில் தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் கான்ஸ்டாசை இந்த முறை 8 ரன்களில் பும்ரா கிளீன் போல்டாக்கினார்.
அவரை தொடர்ந்து கவாஜா 21 ரன்களிலும், ஸ்டீவ் சுமித் 13 ரன்களிலும், ஹெட் 1 ரன்னிலும், மார்ஷ் ரன் எதுவுமின்றியும், கேரி 2 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்த இக்கட்டான சூழலில் கை கோர்த்த மார்னஸ் லபுஸ்சேன் - கேப்டன் கம்மின்ஸ் பொறுப்புடன் விளையாடி அணியை முன்னெடுத்து சென்றனர். இந்த கூட்டணியை சிராஜ் பிரித்தார். அவரது பந்துவீச்சில் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்த லபுஸ்சேன் 70 ரன்களில் ஆட்டமிழந்தார். அணியை வலுவான முன்னிலையை நோக்கி பயணிக்க வைத்த கம்மின்ஸ் 41 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பின்னர் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்காட் போலன்ட் - நாதன் லயன் இணை இந்திய பந்துவீச்சாளர்களுக்கு தண்ணி காட்டியது. இந்த கூட்டணியை உடைப்பதற்கு கேப்டன் ரோகித் சர்மா பவுலர்களை மாற்றி மாற்றி தாக்குதல் கொடுத்தார். இருப்பினும் இந்திய பந்துவீச்சை சமாளித்து விளையாடிய அவர்கள் அணி 200 ரன்களை கடக்க உதவினர். மேலும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்தியா தடுமாறி வருகிறது.
4-வது நாள் முடிவில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் அடித்துள்ளது. நாதன் லயன் 41 ரன்களுடனும், ஸ்காட் போலன்ட் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளும், சிராஜ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
ஆஸ்திரேலியா இதுவரை 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை கடைசி நாள் ஆட்டம் என்பதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட பரபரப்பை உண்டாக்கியுள்ளது.