இந்திய அணி அவர்களை தேர்வு செய்யாதது ஆச்சரியம் அளிக்கிறது - ஆலன் பார்டர்
|இந்தியா - ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
சிட்னி,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்டில் இந்தியாவும், 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. இதனையடுத்து பிரிஸ்பேனில் நடந்த 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழையால் 'டிரா'வில் முடிந்தது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆஸ்திரேலிய மைதானங்களில் முன்பு இந்திய அணி ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளரை அணியில் சேர்ப்பது வழக்கம். ஆனால் இம்முறை அஸ்வின், ஜடேஜா ஆகியோருடன் வாஷிங்டன் சுந்தரையும் தேர்ந்தெடுத்து இந்திய அணி ஆச்சரியப்படுத்தியது.
இவர்கள் 3 பேருமே இந்த தொடரில் இதுவரை தலா ஒரு போட்டியில் விளையாடி உள்ளனர். இருப்பினும் அந்த மூவருமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதற்கிடையே ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்ற நிலையில் கடைசி 2 போட்டிகளில் ஜடேஜா மற்றும் சுந்தர் மட்டுமே இந்தியாவுக்காக விளையாட உள்ளார்கள்.
இந்நிலையில் இத்தொடரில் குல்தீப் யாதவ் அல்லது சஹால் இந்திய அணிக்காக விளையாடாதது தமக்கு ஆச்சரியம் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆலன் பார்டர் தெரிவித்துள்ளார். அத்துடன் இப்போதெல்லாம் லெக் ஸ்பின்னர்களை கேப்டன்கள் சரியாக பயன்படுத்துவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "சஹால் அல்லது குல்தீப் யாதவை இந்திய அணி தேர்வு செய்யாதது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. ஷேன் வார்னே மாதிரி ஒருவரும் உங்களுக்கு வர மாட்டார். இப்போதெல்லாம் லெக் ஸ்பின்னர்களை கேப்டன்கள் சரியாக பயன்படுத்துவதாக எனக்குத் தெரியவில்லை.
ஒரு லெக் ஸ்பின்னர் உருவாக நீண்ட காலம் ஆகும் என்பதை அவர்கள் உணர வேண்டும். அதற்கு நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். அவர்களிடமிருந்து சிறந்த செயல்பாடுகளை உங்களின் கேப்டன்ஷிப் கொண்டு வர வேண்டும்.
விரல் ஸ்பின்னர்கள் இறுக்கமாக இருப்பார்கள். அவர்களிடம் பேட்ஸ்மேன்கள் தாமாக அவுட்டாகும் வரை நீங்கள் காத்திருப்பீர்கள். லெக் ஸ்பின்னர்களின் போக்கு கொஞ்சம் சுமாராக இருக்கும். மிகவும் துல்லியமாக பந்தை சுழற்றுவதால் வார்னே மட்டும் அவர்களில் வித்தியாசமானவர்" என கூறினார்.