< Back
கிரிக்கெட்
பார்டர்-கவாஸ்கர் டிராபி; சச்சின், விராட் கோலி சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்

Image Courtesy: AFP

கிரிக்கெட்

பார்டர்-கவாஸ்கர் டிராபி; சச்சின், விராட் கோலி சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்

தினத்தந்தி
|
27 Dec 2024 10:23 AM IST

ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் எடுத்தார்.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடிலெய்டில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. பிரிஸ்பேனில் நடந்த 3-வது டெஸ்ட் மழையின் பாதிப்பால் 'டிரா' ஆனது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் சாம் கான்ஸ்டாஸ் 60 ரன், கவாஜா 57 ரன், லபுசேன் 70 ரன், அலெக்ஸ் கேடி 31 ரன், மிட்செல் மார்ஷ் 4 ரன் எடுத்து அவுட் ஆகினர்.

இறுதியில் நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 86 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்திருந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டீவ் ஸ்மித் 68 ரன்களுடனும், கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா தொடர்ந்து பேட்டிங் செய்தது. அபாரமாக ஆடிய ஸ்மித் சதம் அடித்து அசத்தினார். மறுபுறம் கம்மின்ஸ் 49 ரன், ஸ்டார்க் 15 ரன் எடுத்து அவுட் ஆகினர். நிதானமாக ஆடி வந்த ஸ்மித் 140 ரன்னில் அவுட் ஆனார்.

இறுதியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 122.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 474 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் அதிக சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது சாதனையை ஸ்டீவ் ஸ்மித் முறியடித்துள்ளார். அதன்படி சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோர் தலா 9 சதங்களை விளாசியுள்ள நிலையில், ஸ்டீவ் ஸ்மித் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் 10ஆவது சதத்தைப் பதிவுசெய்து புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

மேலும் செய்திகள்