பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்: வெற்றி பெற்றது பெருமையாக இருக்கிறது - ஆஸி.கேப்டன் கம்மின்ஸ்
|இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.
சிட்னி,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணி, அதன்பின் மீண்டு வந்து தொடரை 3-1 என்ற கணக்கில் (ஒரு போட்டி டிரா) கைப்பற்றி அசத்தியுள்ளது. மேலும் சொந்த மண்ணில் கடந்த 2 பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்களில் கண்ட தோல்விக்கு தற்போது கம்மின்ஸ் தலைமையில் பதிலடி கொடுத்துள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் தாங்கள் பெற்ற வெற்றி குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேசுகையில், "உண்மையிலேயே இந்த தொடரை கைப்பற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்தே நாங்கள் சரியான திட்டத்துடன் இருந்தோம். அந்த வகையில் இந்த தொடரின் முடிவில் வெற்றி பெற்றது பெருமையாக இருக்கிறது. பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டி எங்களுக்கு சாதகமாக செல்லவில்லை என்றாலும், ஒரு அணியாக நாங்கள் மீண்டு வந்து இந்த கோப்பையை ஜெயித்ததில் உண்மையிலேயே மகிழ்ச்சி.
எங்களது அணியில் மூன்று வீரர்கள் இந்த தொடரில் அறிமுகமாகி மிகச்சிறப்பான பங்களிப்பை வழங்கி இருந்தனர். இப்படி ஒரு அடியுடன் இணைந்து விளையாடியது உண்மையிலேயே சந்தோஷமாக இருந்தது. இதுபோன்ற பெரிய அணிக்கு எதிராக பெற்ற வெற்றி எங்களுக்கு இன்னும் நம்பிக்கையை அளித்துள்ளது. இந்திய அணியும் இந்த தொடரில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ரசிகர்களுக்கும் இந்த தொடர் விருந்தாக அமைந்தது. ரோகித் மற்றும் ஜஸ்பிரித்துக்கு நன்றி." என்று கூறினார்.