பார்டர் - கவாஸ்கர் கோப்பை: முகமது ஷமி இடம்பெற வாய்ப்பில்லை.. பி.சி.சி.ஐ. அறிவிப்பு
|முகமது ஷமிக்கு காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என பி.சி.சி.ஐ. மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பையான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. 4-வது போட்டி வரும் 26-ம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் போது ஏற்பட்ட காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால் அவரால் இடம் பெற முடியவில்லை.
தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ள முகமது ஷமி உள்ளூர் தொடர்களில் களமிறங்கி சிறப்பான வெளிப்பாட்டை வெளிப்படுத்தினார்.
நவம்பரில் மத்தியப் பிரதேசத்திற்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் ஷமி 43 ஓவர்கள் பந்து வீசினார். இதைத் தொடர்ந்து, சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரிலும் தொடர்ந்து விளையாடினார். அங்கு டெஸ்ட் போட்டிகளுக்குத் தயாராகும் பொருட்டு தனது பந்துவீச்சு அளவை அதிகரிக்க அவர் கூடுதலாக பயிற்சியில் ஈடுபட்டார்.
இதனால் அவர் விரைவில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணியினுடன் இணைவார் என்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனிடையே அவரது உடற்தகுதி திறனை பி.சி.சி.ஐ. மருத்துவக்குழு தீவிரமாக கண்காணித்து வந்தது.
இந்நிலையில் பணிச்சுமையால் அவரது இடது முழங்காலில் சிறிய வீக்கம் ஏற்பட்டுள்ளது. நீண்ட காலத்திற்குப் பிறகு அதிகரித்த பணிச்சுமை காரணமாக வீக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய மருத்துவ மதிப்பீட்டின் அடிப்படையில், அவர் மீண்டும் முழு உடற்தகுதியுடன் களத்திற்கு திரும்ப அதிக நேரம் தேவை என்று பி.சி.சி.ஐ. மருத்துவக் குழு தீர்மானித்துள்ளது.
இதன் காரணமாக, பார்டர்-கவாஸ்கர் டிராபியின் மீதமுள்ள இரண்டு போட்டிகளில் முகமது ஷமி இடம்பெற வாய்ப்பில்லை என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
மேலும் விஜய் ஹசாரே டிராபியில் அவர் பங்கேற்பது அவரது முழங்காலின் முன்னேற்றத்தைப் பொறுத்தே அமையும் என்று தகவல் வெளியாகி உள்ளது.