பார்டர்-கவாஸ்கர் டிராபி; இந்திய அணியில் முகமது ஷமி..? - வெளியான தகவல்
|ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டுக்கு முன் ஷமி இந்திய அணியுடன் இணைவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொல்கத்தா,
கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் போது இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயமடைந்தார். அந்த தொடரில் இந்திய அணிக்காக மொத்தம் 24 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியிருந்தார். காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் எந்த வித கிரிக்கெட்டும் ஆடாமல் ஓய்வில் இருந்தார்.
எதிர்வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் முகமது ஷமி இடம் பிடிப்பார் என தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் முகமது ஷமி காயம் குணமடையாததால் அவரால் இடம் பெற முடியவில்லை. இந்நிலையில், கணுக்கால் காயத்தில் இருந்து மீண்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ரஞ்சி கிரிக்கெட்டில் பெங்கால் அணிக்காக நேற்று 4 விக்கெட்டுகளை கபளீகரம் செய்தார். இதன் காரணமாக அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணியில் இடம் பெறுவார் கூறப்படுகிறது.
முகமது ஷமியின் செயல்பாட்டை தேர்வு குழுவினர் கண்கானித்து வருவதாக கூறப்படுகிறது. ரஞ்சி டிராபியின் முதல் இன்னிங்ஸ் போல் 2-வது இன்னிங்சிலும் அவர் சிறப்பாக பந்து வீசவேண்டியது அவசியம். போட்டி முடிந்ததும் அவருக்கு வலி எதுவும் இருக்கிறதா என தேசிய கிரிக்கெட் கமிட்டியின் மருத்துவ குழுவினர் சோதிப்பார்கள்.
முழு உடல்தகுதியை எட்டி விட்டார் என்று தேசிய கமிட்டி அறிவித்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டுக்கு முன்பாக அவர் இந்திய அணியுடன் இணைந்து விடுவார் என்று கிரிக்கெட் வாரிய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.