பார்டர் கவாஸ்கர் டிராபி இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு இணையானது இல்லை - ஆஸி. முன்னாள் வீரர்
|இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (பார்டர்-கவாஸ்கர் தொடர்) தொடரில் ஆட உள்ளது.
பெர்த்,
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது. இதையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (பார்டர்-கவாஸ்கர் தொடர்) தொடரில் ஆட உள்ளது.இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது.
தற்போது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.இதனால் இந்த தொடர் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா மோதலை ரசிகர்கள் இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு இணையாக பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் என்ன தான் தரத்தில் உயர்ந்ததாக இருந்தாலும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு இந்தியா -ஆஸ்திரேலியா போட்டிகள் இணையாகாது என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் ஹசி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்களுக்கு எப்போதும் மிகவும் ஸ்பெஷலான ஒன்று. அதே சமயம், இந்தியா – பாகிஸ்தான் போட்டியுடன் நம்முடைய (பார்டர்-கவாஸ்கர் டிராபி) தொடரை ஒப்பிட முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. அது மிகவும் தனித்துவமான தொடராகும். இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டி எப்போதுமே மிகவும் வலுவானதாக இருக்கிறது.
அதே சமயம் இந்திய அணி, உலக கிரிக்கெட்டின் ரியல் பவர் ஹவுஸாக தற்போது உருவெடுத்துள்ளது. ஆஸ்திரேலியா கடந்த 20 - 30 வருடங்களாகவே மிகவும் வலுவான அணியாக செயல்பட்டு வருகிறது. எனவே இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான போட்டி தற்போது நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. அந்தத் தொடரில் 2 மகத்தான நாடுகளைச் சேர்ந்த அணிகள் நேருக்கு நேராக மோதுவதை அனைவரும் பார்க்க விரும்புவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.