பார்டர்-கவாஸ்கர் டிராபி; புஜாராவின் அனுபவம் இந்திய அணிக்கு தேவை - முன்னாள் தேர்வுக்குழு தலைவர்
|பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடருக்கான இந்திய அணியில் புஜாரா தேர்வு செய்யப்படவில்லை.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது.
அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்று 10 வருடங்கள் ஆகிவிட்டது. இதனால் இம்முறை இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் அனுபவ வீரரான புஜாரா இடம் பெறவில்லை. இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணிக்கு புஜாராவின் அனுபவம் நிச்சயம் தேவை. அவரை அணியில் தேர்வு செய்ய வேண்டும் என இந்திய முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
புஜாரா இப்போது தான் ரஞ்சிக் கோப்பையில் இரட்டை சதமடித்தார். அவர் இந்திய அணிக்கு ஆஸ்திரேலியாவில் தேவைப்படும் அனுபவம் மற்றும் திடத்தன்மை ஆகியவற்றை கொண்டு வருவார். அவரை அணியில் தேர்வு செய்ய வேண்டும். அதே போல இந்தியா ஏ அணிக்காக ஒரு போட்டியில் விளையாடிய பின் நிதிஷ் குமாரை பி.சி.சி.ஐ தேர்வு செய்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.