பார்டர் - கவாஸ்கர் கோப்பை தோல்வி: இந்திய அணியின் கேப்டன் பும்ரா கூறியது என்ன..?
|பார்டர் - கவாஸ்கர் கோப்பையின் தொடர் நாயகனாக பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிட்னி,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் ரோகித் இல்லாத சூழலில் கேப்டன் பொறுப்பை ஏற்ற பும்ரா இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். 2-வது போட்டியில் ரோகித் அணிக்கு திரும்பிய நிலையில் கேப்டன் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார்.
ஆனால் ரோகித் தலைமையில் விளையாடிய இந்தியா 2 மற்றும் 4-வது போட்டிகளில் தோல்வியும், 3-வது டெஸ்டில் டிராவும் கண்டது. இந்த தோல்விகளுக்கு கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் சுமாராக விளையாடிய ரோகித் ஒரு காரணமாக அமைந்தார். இதனால் கடைசி போட்டியிலிருந்து அவர் விலக, கேப்டன் பொறுப்பு மீண்டும் பும்ராவுக்கு வழங்கப்பட்டது.
இருப்பினும் சிட்னியில் நடைபெற்ற 5-வது மற்றும் டெஸ்டில் பும்ரா தலைமையில் விளையாடிய இந்திய அணியும் தோல்வியே கண்டது. முதுகு வலி காரணமாக பும்ரா 2-வது இன்னிங்சில் பந்துவீசாதது அணிக்கு பலத்த பின்னடைவாக அமைந்தது. ஏனெனில் 32 விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர் இந்த தொடரின் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் கடைசி டெஸ்டின் முக்கியமான தருணத்தில் பந்து வீச முடியாமல் போனது ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக அமைந்தது.
இந்நிலையில் சிட்னி டெஸ்ட் தோல்விக்குப்பின் பேட்டியளித்த இந்திய அணியின் கேப்டன் பும்ரா கூறுகையில், " காயத்தால் விளையாட முடியாதது கொஞ்சம் விரக்தியை கொடுக்கிறது. ஆனால் சில நேரங்களில் நீங்கள் உங்களுடைய உடலுடன் சண்டையிடாமல் அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும். இந்த தொடரில் இருந்ததிலேயே பவுலிங் செய்வதற்கு அதிக சாதகமான பிட்ச்சில் பந்து வீச முடியாதது ஏமாற்றம். முதல் இன்னிங்சில் கொஞ்சம் அசவுகரியமாக உணர்ந்ததால் அந்த முடிவை எடுத்தேன். அப்போது மற்ற பவுலர்கள் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று பேசினோம். ஒரு பந்து வீச்சாளர் குறைந்த நிலையில், மற்றவர்கள் பொறுப்பேற்க வேண்டியிருந்தது.
இன்று காலை வெற்றிக்கு தேவையான போராட்ட குணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நாங்கள் பேசினோம். இந்தத் தொடர் முழுவதும் நாங்கள் கடினமாக சண்டையிட்டோம். அதனால் இன்று உட்பட நாங்கள் ஒருதலைபட்சமாக தோற்றோம் என்று அர்த்தமல்ல. ஆனால் டெஸ்ட் போட்டிகள் அவ்வாறுதான் செல்லும். நீண்ட நேரம் களத்தில் நின்று அழுத்தத்தை உருவாக்கி உள்வாங்கி சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் விளையாடுவது முக்கியம்.
இது போன்ற அனுபவங்கள் எங்களுக்கு வருங்காலத்தில் உதவும். தங்களது பலத்தை அடிப்படையாக வைத்து விளையாடிய இளம் வீரர்கள் நல்ல அனுபவத்தை பெற்றனர். தொடரை வெல்ல முடியாததால் அவர்கள் ஏமாற்றத்தை சந்தித்திருப்பார்கள். ஆனால் இந்த அனுபவத்திலிருந்து அவர்கள் பாடங்களை எடுத்துக் கொள்வார்கள். இது சிறந்த தொடராக அமைந்தது. ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள். அவர்களும் கடினமாக போராடினார்கள்" என்று கூறினார்.