பார்டர்-கவாஸ்கர் டிராபி; கடைசி இரு ஆட்டங்களுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
|கடைசி இரு ஆட்டங்களுக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து தொடக்க ஆட்டக்காரர் நாதன் மெக்ஸ்வீனி நீக்கப்பட்டுள்ளார்.
மெல்போர்ன்,
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆடி வருகிறது. இதில் 3 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது.
இரு அணிகளுக்கும் இடையிலான 4வது போட்டி வரும் 26ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய இரு டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் இருந்து தொடக்க ஆட்டக்காரரான நாதன் மெக்ஸ்வீனி நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சாம் கான்ஸ்டாஸ் இடம் பிடித்துள்ளார்.
மேலும், இந்த அணியில் காயம் காரணமாக ஜோஷ் ஹேசில்வுட் இடம் பெறவில்லை. அதேசமயம் அணியில் ஜை ரிச்சர்ட்சன், பியூ வெப்ஸ்டர், சீன் அப்போட் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இந்த அணிக்கு கேப்டனாக பேட் கம்மின்ஸூம், துணை கேப்டன்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி விவரம்: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), டிராவிஸ் ஹெட் (துணை கேப்டன்), உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ், மார்னஸ் லபுஸ்சேன், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், சீன் அப்போட், ஸ்காட் போலண்ட், பியூ வெப்ஸ்டர், ஜை ரிச்சர்ட்சன், நாதன் லயன்.