பார்டர் - கவாஸ்கர் கோப்பை: இந்திய அணியில் அஸ்வினுக்கு மாற்று வீரர் அறிவிப்பு
|ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார்.
மும்பை,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. 3 டெஸ்ட் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் 'பாக்சிங் டே' என்ற பாரம்பரிய சிறப்புடன் தொடங்கும் இந்த போட்டிக்காக இந்திய வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே இந்திய அணியில் இடம்பெற்றிருந்த முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், 3-வது போட்டி முடிவடைந்த உடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். இந்த தொடரில் இன்னும் 2 போட்டிகள் எஞ்சியிருந்த நிலையில் அவர் ஓய்வை அறிவித்தது அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் அமைந்தது.
இதனையடுத்து அவருக்கான மாற்று வீரர் அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் எஞ்சியுள்ள 2 போட்டிகளுக்கான இந்திய அணியில் அஸ்வினுக்கு மாற்று வீரராக தனுஷ் கோட்டியான் சேர்க்கப்பட்டுள்ளார்.
மும்பையை சேர்ந்த ஆப் ஸ்பின் ஆல்ரவுண்டரான தனுஷ் கோட்டியான், சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.