கிரிக்கெட்
பிக் பாஷ் லீக்: மேக்ஸ்வெல் அதிரடி.. சிட்னி சிக்சர்ஸ் அணியை வீழ்த்திய மெல்போர்ன் ஸ்டார்ஸ்
கிரிக்கெட்

பிக் பாஷ் லீக்: மேக்ஸ்வெல் அதிரடி.. சிட்னி சிக்சர்ஸ் அணியை வீழ்த்திய மெல்போர்ன் ஸ்டார்ஸ்

தினத்தந்தி
|
9 Jan 2025 6:59 PM IST

இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக மேக்ஸ்வெல் தேர்வு செய்யப்பட்டார்.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பாஷ் லீக் தொடரின் 14-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மெல்போர்னில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்டோய்னிஸ் தலைமையிலான மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி, ஹென்ரிக்ஸ் தலைமையிலான சிட்னி சிக்சர்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் அணி ஆரம்ப கட்டத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. அந்த அணியில் டக்கெட் 20 ரன்களிலும், சாம் ஹார்பர் 4 ரன்களிலும், டான் லாரன்ஸ் 14 ரன்களிலும், ஸ்டோய்னிஸ் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் கை கோர்த்த வெப்ஸ்டர் - மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்து அணியை முன்னெடுத்து சென்றனர். வெப்ஸ்டர் நிதான ஆட்டத்தை கடைபிடிக்க மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து அசத்தினார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மெல்போர்ன் 5 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 58 ரன்களும், வெப்ஸ்டர் 41 ரன்களும் அடித்தனர். சிக்சர்ஸ் தரப்பில் சீன் அபோட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சிட்னி சிக்சர்சுக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜேம்ஸ் வின்ஸ் மட்டும் தனி ஆளாக போராடினார். மறுமுனையில் இருந்து அவருக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. அந்த அணியின் முன்னணி வீரர்களான ஜோஷ் பிலிப் (8 ரன்கள்), ஹென்ரிக்ஸ் (13 ரன்கள்) ஏமாற்றம் அளித்தனர்.

முடிவில் 20 ஓவர்கள் தாக்குப்பிடித்த சிட்னி சிக்சர்ஸ் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் 16 ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி சிக்சர்சை வீழ்த்தி மெல்போர்ன் ஸ்டார்ஸ் வெற்றி பெற்றது. சிட்னி தரப்பில் அதிகபட்சமாக ஜேம்ஸ் வின்ஸ் 53 ரன்கள் அடித்தார். மெல்போர்ன் தரப்பில் மார்க் ஸ்டெக்கிடி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மேக்ஸ்வெல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்