பிக் பாஷ் லீக்: அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை வீழ்த்திய ஹோபர்ட் ஹரிகேன்ஸ்
|ஹோபர்ட் ஹரிகேன்ஸ் தரப்பில் அதிகபட்சமாக டிம் டேவிட் 62 ரன்கள் எடுத்தார்.
ஹோபர்ட்,
இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் தொடர் போல ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. அதன்படி 14வது பிக் பாஷ் லீக் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் - ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அடிலெய்டு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 186 ரன்கள் எடுத்தது. அடிலெய்டு தரப்பில் அதிகபட்சமாக கிறிஸ் லின் 49 ரன் எடுத்தார். ஹோபர்ட் ஹரிகேன்ஸ் தரப்பில் வக்கார் சலாம்கெயில் 2 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து 187 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹோபர்ட் அணி களம் புகுந்தது. ஹோபர்ட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் ஓவென் மற்றும் மேத்யூ வேட் களம் இறங்கினர். இதில் மிட்செல் ஓவென் 37 ரன்னிலும், மேத்யூ வேட் 27 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இதையடுத்து களம் புகுந்த ஷாய் ஹோப் 11 ரன், பென் மெக்டெர்மாட் 17 ரன், நிகில் சவுத்ரி 22 ரன் எடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து டிம் டேவிட் மற்றும் கிறிஸ் ஜோர்டான் களம் புகுந்தனர். இதில் டிம் டேவிட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக ஆடி சிக்சர் மழை பொழிந்த டிம் டேவிட் அரைசதம் அடித்து அசத்தினார்.
இறுதியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 187 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹோபர்ட் ஹரிகேன்ஸ் தரப்பில் அதிகபட்சமாக டிம் டேவிட் 28 பந்தில் 62 ரன் எடுத்தார். அடிலெய்டு தரப்பில் லியாட் போப், கேமரூன் பாய்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.