பிக் பாஷ் லீக்; பின் ஆலன் அதிரடி... பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் 177 ரன்கள் குவிப்பு
|பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் தரப்பில் அதிரடியாக ஆடிய பின் ஆலன் 68 ரன்கள் எடுத்தார்.
பெர்த்,
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பாஷ் லீக் தொடரின் 14-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பெர்த்தில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் - சிட்னி தண்டர் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற சிட்னி தண்டர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து பெர்த் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மேத்யூ ஹர்ஸ்ட் மற்றும் பின் ஆலன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் மேத்யூ ஹர்ஸ்ட் 23 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து களம் இறங்கிய ஆரோன் ஹார்டி 10 ரன்னிலும், ஆஷ்டன் டர்னர் ரன் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். மறுபுறம் அதிரடியில் மிரட்டிய பின் ஆலன் 31 பந்தில் 68 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து கன்னோலி மற்றும் நிக் ஹாப்சன் ஜோடி சேர்ந்தனர். இருவரும் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்து கொண்டதோடு அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இறுதியில் பெர்த் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 177 ரன்கள் எடுத்தது. பெர்த் தரப்பில் அதிகபட்சமாக பின் ஆலன் 68 ரன், கன்னோலி 43 ரன் எடுத்தனர். சிட்னி தண்டர் தரப்பில் கிறிஸ் க்ரீன் 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 178 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி தண்டர் அணி ஆடி வருகிறது.