2016-ம் ஆண்டிலேயே பெங்களூரு அணி கோப்பையை வென்றிருக்க வேண்டும்.. ஆனால் - கே.எல்.ராகுல்
|2016-ல் நடைபெற்ற ஐ.பி.எல். சீசனின் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி தோல்வியை தழுவியது.
பெங்களூரு,
இந்த வருடம் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணி 4-வது இடம் பிடித்தது. 2008 முதல் தொடர்ந்து விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. இத்தனைக்கும் அந்த அணிக்கு ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி, விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் கேப்டனாக செயல்பட்டனர்.
அவர்களது தலைமையில் கிறிஸ் கெயில், ஏபி டி வில்லியர்ஸ், ஷேன் வாட்சன் போன்ற நிறைய மகத்தான வீரர்கள் விளையாடினர். ஆனால் ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை. அந்த அணியின் இந்த தோல்விக்கு பல வல்லுனர்களும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக கடந்த 2016 ஐ.பி.எல். தொடரில் விராட் கோலி தலைமையில் பெங்களூரு அட்டகாசமாக விளையாடி இறுதிப்போட்டிக்கு சென்றது. குறிப்பாக விராட் கோலி மட்டும் அந்த சீசனில் 973 ரன்கள் குவித்து தன்னுடைய அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார். அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 208 ரன்கள் குவித்தது. பின்னர் சேசிங் செய்த பெங்களூரு அணிக்கு கிறிஸ் கெயில் 76, விராட் கோலி 54 ரன்கள் விளாசி 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தனர்.
ஆனால் அவர்களுக்குப் பின் வந்த ராகுல், ஏபி டி வில்லியர்ஸ், ஷேன் வாட்சன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் பெரிய ரன்கள் எடுத்த தவறினார்கள். அதனால் வெறும் 8 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்ற பெங்களூரு கிரிக்கெட் அணி இதுவரை முதல் கோப்பையை வெல்ல முடியாமல் தடுமாறி வருகிறது.
இந்நிலையில் அந்தத் தோல்வி பற்றி கேஎல் ராகுல் சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு:- "2016 ஐபிஎல் இறுதிப்போட்டி பற்றி நானும் விராட் கோலி பலமுறை பேசுகிறோம். எங்கள் இருவரில் ஒருவர் இன்னும் கொஞ்ச நேரம் அதிகமாக விளையாடிருந்தால் நாங்கள் கோப்பையை வென்றிருப்போம். அந்த வருடத்தில் நாங்கள் மிகவும் ஸ்பெஷலான செயல்பாடுகளை வெளிப்படுத்தினோம்.
அதனால் சின்னசாமி மைதானத்தில் கோப்பையை வென்று கதையை மகிழ்ச்சியாக முடித்திருப்போம். ஆனால் துரதிஷ்டவசமாக அது நடைபெறவில்லை. 2016 சீசனில் பெங்களூரு அணியில் என்னுடைய நேரத்தை மகிழ்ச்சியுடன் செலவிட்டேன். பெங்களூரு என்னுடைய சொந்த ஊர்" என்று கூறினார்.