பி.சி.சி.ஐ செயலாளர் பதவி...வேட்புமனு தாக்கல் செய்தார் தேவஜித் சைகியா
|தேவஜித் சைகியா தற்போது பி.சி.சி.ஐ-யின் இடைக்கால செயலாளராக செயல்பட்டு வருகிறார்.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளராக இருந்த ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) புதிய தலைவராக கடந்த டிசம்பர் 1-ந் தேதி பொறுப்பேற்றார். இதனால் பி.சி.சி.ஐ-யின் செயலாளர் பதவி காலியானது. இதையடுத்து, பி.சி.சி.ஐ-யின் இடைக்கால செயலாளராக தேவஜித் சைகியாவை, தலைவர் ரோஜர் பின்னி கடந்த டிசம்பர் 9ம் தேதி நியமித்தார்.
சைகியா இதற்கு முன்னர் இணை செயலாளர் பதவியில் இருந்தார். புதிய செயலாளரை தேர்ந்தெடுக்கும் வரையில் அவர் இந்த பதவியில் தொடர்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்திய கிரிக்கெட் வாரிய விதிப்படி இந்த பதவியை 45 நாட்களுக்குள் நிரப்ப வேண்டும். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளர் பதவிக்கு போட்டியிட தேவஜித் சைகியா இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
அவருடன், பி.சி.சி.ஐ-யின் பொருளாளர் பதவிக்கு பிரப்தேஜ் சிங் பாட்டியாவும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். தேர்தல் வரும் 12-ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. இருவர் மட்டுமே வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதால், இந்த இருவரும் போட்டியின்றி தேர்ந்தப்படுவார்கள் என்பது உறுதியாகி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வரும் 12ம் தேதி நடைபெறும் சிறப்பு பொதுக் கூட்டத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.