
image courtesy:twitter
ஐ.பி.எல்.-ல் 18 ஆண்டுகள்... தோனிக்கு நினைவு பரிசு வழங்கிய பி.சி.சி.ஐ.

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முன் பி.சி.சி.ஐ. இந்த பரிசை வழங்கியது.
கவுகாத்தி,
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அசாம் மாநிலம் கவுகாத்தியில் அரங்கேறிய 11-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிதிஷ் ராணாவின் அதிரடியின் மூலம் (81 ரன்கள்) 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 182 ரன்கள் அடித்தது. சென்னை தரப்பில் கலீல் அகமது, பதிரானா, நூர் அகமது தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
அடுத்து 183 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 176 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் ராஜஸ்தான் 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கெய்க்வாட் 63 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்த போட்டிக்கு முன்னதாக ஐ.பி.எல். தொடரில் 18 ஆண்டுகளாக விளையாடி வரும் மகேந்திரசிங் தோனியை கவுரவிக்கும் விதமாக பி.சி.சி.ஐ. சிறப்பு நினைவு பரிசை வழங்கியது. இதனை பி.சி.சி.ஐ. செயலாளர் தேவஜித் சைகியா வழங்கினார்.