பேஸ்பால் வெறும் விளம்பரம்தான்... இங்கிலாந்தை வீழ்த்த இலங்கைக்கு ஜெயசூர்யா அட்வைஸ்
|பேஸ்பால் என்பது வெறும் விளம்பரம் என சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.
கொழும்பு,
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ளது.
இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து இலங்கை வெல்வது கடினமானதாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் பென் ஸ்டோக்ஸ் - மெக்கல்லம் ஆகியோர் புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்றது முதல் டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே இங்கிலாந்து டி20 போல அதிரடியாக விளையாடுகிறது.
இந்நிலையில் பேஸ்பால் என்பது வெறும் விளம்பரம் என இலங்கை அணியின் பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். மேலும் ஆடம் கில்கிறிஸ்ட், ஹெய்டன் போன்ற தங்கள் காலத்தைச் சேர்ந்தவர்கள் அப்போதே டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடியதாக அவர் கூறியுள்ளார். எனவே இத்தொடரில் இங்கிலாந்தை வீழ்த்த இலங்கைக்கு அவர் கொடுத்த சில ஆலோசனைகள் பின்வருமாறு:-
"சூழ்நிலையை பொறுத்து உங்களிடம் பல்வேறு ஸ்டைல் இருக்கும். ஆடம் கில்கிறிஸ்ட், ஹெய்டன் அதை எங்களது காலத்தில் செய்தனர். இது போல கடந்த காலங்களில் நாங்கள் விளையாடினோம். ஆனால் தற்போது இது புதிதாக இருப்பதாக ஊடகங்களில் வெறும் விளம்பரம் காணப்படுகிறது. இங்கிலாந்து ஆரம்பத்தில் இருந்தே அட்டாக் செய்யும் கிரிக்கெட்டை விளையாட முயற்சிக்கிறது. ஆனால் கடைசியில் 300 - 400 ரன்களை தொடுவதே இலக்காகும்.
எனவே நமது அணியில் பசி இருக்க வேண்டும் என்பதை நான் உறுதி செய்து கொள்ள விரும்புகிறேன். இந்த 3 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு உங்களுக்கு எளிதாக கிடைக்காது. எனவே நாம் அதை முழுமையாக பயன்படுத்த வேண்டும். இங்கிலாந்தில் ரன்கள் அடிப்பது சவாலாகும். ஏனெனில் பிட்ச் பிளாட்டாக இருந்தாலும் பந்து வேகம் மற்றும் ஸ்விங் ஆகும். எனவே அதற்கு நாம் அட்ஜஸ்ட் செய்து போராட வேண்டும். உங்களிடம் 6 - 7 பேட்ஸ்மேன்கள் இருந்தால் கண்டிப்பாக 2 - 3 பேர் அசத்துவார்கள். அவர்களுக்கு நல்ல துவக்கம் கிடைத்தால் அதை பயன்படுத்தி பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டும். அனைவரும் தங்களுடைய இயற்கையான ஆட்டத்தை விளையாட வேண்டும். இங்கே பந்து பழையதானால் கூட வேகம் இருக்கும்" என்று கூறினார்.