பாக். கிரிக்கெட் வாரியத்திடம் வங்காளதேச அணி வினோத புகார்... என்ன நடந்தது..?
|பாகிஸ்தான் - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது.
லாகூர்,
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி அந்நாட்டு அணிக்கெதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது.
இதனையொட்டி வங்காளதேச வீரர்கள் முதல் போட்டி நடைபெறும் ராவில்பிண்டி நகரில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். பயிற்சிகளை முடித்த பின் அவர்கள் ஹோட்டலில் தங்கி இருக்கின்றனர்.
இந்நிலையில் அங்கே தங்களுக்கு வேகமான இணையதள இணைப்பு கிடைக்கவில்லை என்று வங்காளதேச வீரர்கள் வினோத புகார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தற்சமயத்தில் வங்காளதேசத்தில் பதற்றமான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. எனவே தங்களுடைய குடும்பத்தினருடன் பெரும்பாலான வங்கதேச வீரர்கள் வீடியோ அழைப்பில் பேச விரும்புகின்றனர்.
ஆனால் ராவில்பிண்டி நகரில் போதுமான அளவுக்கு இணையதளம் வேகமாக இல்லை என்று தெரிய வருகிறது. அதனால் தங்களுக்கு வேகமான இணையதள இணைப்பை பெற்றுக் கொடுக்குமாறு அவர்கள் வங்காளதேச அணி நிர்வாகத்திடம் புகார் செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதை பாகிஸ்தான் வாரியத்திடம் வங்காளதேச அணி நிர்வாகம் புகாராக கொடுத்துள்ளது.