< Back
கிரிக்கெட்
பாபர் அசாம் பொறுப்பான ஆட்டம்... அயர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி
கிரிக்கெட்

பாபர் அசாம் பொறுப்பான ஆட்டம்... அயர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி

தினத்தந்தி
|
16 Jun 2024 6:24 PM GMT

அயர்லாந்து அணியின் அபார பந்துவீச்சால் அணியில் முன்னனி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

புளோரிடா,

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் - அயர்லாந்து அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு முதல் ஓவரிலேயே பேரதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆன பால்பிர்னி டக் அவுட்டிலும், அவரை தொடர்ந்து டக்கர் 2 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இருவரின் விக்கெட்டுகளையும் ஷாகீன் அப்ரிடி வீழ்த்தினார்.

இதனைதொடர்ந்து 2-வது ஓவரை வீசிய முகமது அமீரும் தனது முதல் ஓவரிலேயே விக்கெட் வேட்டையை தொடங்கினார். தொடர்ந்து கடும் நெருக்கடி கொடுத்த பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அயர்லாந்து திணறியது.

அந்த அணியில் டெலானி ஓரளவு சமாளித்து ரன்கள் சேர்த்தார். இதன்மூலம் அயர்லாந்து கவுரவ நிலையை எட்டியது. மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி கட்ட ஓவர்களில் ஜோஷ்வா லிட்டில் திறம்பட சமாளித்து அணிக்கு ரன்கள் சேர்த்தார்.

20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த அயர்லாந்து 106 ரன்கள் அடித்தது. அணியில் அதிகபட்சமாக டெலானி 31 ரன்களும், லிட்டில் 22 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஷாகீன் அப்ரிடி, இமாத் வாசிம் தலா 3 விக்கெட்டுகளும், முகமது அமீர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து 107 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி பாகிஸ்தான் பேட்டிங் செய்தது. அயர்லாந்து அணியின் அபார பந்துவீச்சால் அணியில் முன்னனி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். எனினும், கேப்டன் பாபர் அசாம் பொறுப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார்.

இறுதியில் பாகிஸ்தான் அணி 18.5 ஓவர்களில் இலக்கை கடந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆறுதல் வெற்றியுடன் உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றுடன் இருந்து பாகிஸ்தான் வெளியேறியது.

மேலும் செய்திகள்