பாகிஸ்தான் அணியில் இருந்து பாபர் அசாம் நீக்கம்?
|இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து பாபர் அசாம் நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முல்தான்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் கடந்த 7ம் தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் 149 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 556 ரன்கள் குவித்தது.
பாகிஸ்தான் தரப்பில் ஷபீக் 102 ரன், ஷான் மசூத் 151 ரன், ஆகா சல்மான் 104 ரன் எடுத்தனர். இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 150 ஓவர்களில் 7 விக்கெட்டை மட்டும் இழந்து 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து தரப்பில் ஹாரி புரூக் 317 ரன்னும் ஜோ ரூட் 262 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர்.
இதனை தொடர்ந்து 2வது இன்னிங்சில் களமிறங்கிய பாகிஸ்தான் தொடக்கம் முதல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்துல்லா ஷபீக் ரன் எதுவும் எடுக்காமலும் , சைம் ஆயுப் 25 ரன்களும், ஷான் மசூத் 11 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய ஆகா சல்மான் சிறப்பாக விளையாடினார். இறுதியில் நேற்றைய 4வது நாள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 152 ரன்கள் எடுத்திருந்தது. ஆகா சல்மான் 41 ரன்களுடனும், அமீர் ஜமால் 27 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதனையடுத்து 5வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் வீரர்கள் இங்கிலாந்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் பாகிஸ்தான் தனது 2வது இன்னிங்சில் 54.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 220 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தானின் அப்ரார் அகமது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பேட்டிங் செய்ய வரவில்லை. இதன் மூலம் 47 ரன் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஆகா சல்மான் 63 ரன் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஜேக் லீச் 4 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி தொடங்குகிறது.
இந்த சூழலில், இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் அணியாக மோசமான உலக சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது. அதாவது, ஒரு போட்டியில் முதல் இன்னிங்சில் 500+ ரன்கள் அடித்தும் கடைசி இன்னிங்சில் தோல்வியை சந்தித்த முதல் அணி என்ற மோசமான உலக சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து பாபர் அசாம் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் நடுவர் அலீம் தாரை உள்ளடக்கிய தேர்வுக்குழு இம்முடிவை எடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு இன்னிங்ஸ்களிலும் பாபர் அசாம் 30 மற்றும் 5 ரன்களை மட்டுமே எடுத்தார், ஆடுகளம் பேட்டிங்கிற்கு ஒரு முழுமையான ஆதரவாக இருந்தபோதிலும் அவர் ரன் எடுக்க திணறினார். 2022 டிசம்பருக்கு பிறகு டெஸ்டில் பாபர் அசாம் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.