இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணிக்கு தேவைப்பட்டால் மீண்டும் வர தயார் - வார்னர் அதிரடி
|டேவிட் வார்னர், டி20 உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
சிட்னி,
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி தொடக்க ஆட்டக்காரர் ஆன டேவிட் வார்னர், சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். ஆஸ்திரேலிய அணிக்காக 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8786 ரன்களும், 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6932 ரன்களும், 110 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 3277 ரன்களும் குவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டி டி20 தொடர்களில் தொடர்ந்து விளையாடுவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தேவைப்பட்டால் இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஓய்விலிருந்து மீண்டும் வந்து தொடக்க வீரராக விளையாட தயாராக இருப்பதாக டேவிட் வார்னர் அறிவித்துள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "எப்போதும் தயாராக இருக்கிறேன். அழைத்தால் தொலைபேசியை எடுப்பது மட்டுமே மீதம். அதற்காக மிகவும் நான் தீவிரமாக இருக்கிறேன். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற டெஸ்ட் தொடருக்குப்பின் ஆஸ்திரேலிய அணியினர் ஒரே ஒரு உள்ளூர் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளனர். நானும் அதே உள்ளூர் போட்டியில் விளையாடி அவர்களைப் போலவே தயாராகியுள்ளேன்.
எனவே இந்திய தொடருக்கு என்னை அவர்கள் விரும்பினால் அடுத்த உள்ளூர் போட்டியில் விளையாடுவேன். சரியான காரணங்களுக்காகவே நான் ஓய்வு பெற்றேன். ஆனால் ஒருவேளை ஆஸ்திரேலிய அணியினர் என்னை போன்றவரை தீவிரமாக விரும்பினால் என்னுடைய கை அதற்கு உயர்ந்து இருக்கும். அதற்காக நான் கூச்சப்பட போவதில்லை" என்று கூறினார்.