துப்பாக்கிய பிடிங்க வாஷி - விஜய்யின் 'தி கோட்' பட பாணியில் சுந்தருக்கு பதிலளித்த அஸ்வின்
|சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அஸ்வினுக்கு வாஷிங்டன் சுந்தர் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
சென்னை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளிலிருந்து நேற்று ஓய்வு அறிவித்தார். சென்னையை சேர்ந்த 38 வயதான அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013-ம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தார்.
இந்திய அணிக்காக 106 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 537 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். மேலும் 116 ஒருநாள் போட்டியில் 156 விக்கெட்டும், 65 இருபது ஓவர் போட்டியில் 72 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார். இந்தியாவில் நடைபெற்ற பல டெஸ்ட் தொடர்களில் அணிக்கு தனி ஆளாக போராடி வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார்.
அந்த சூழலில் அஸ்வினுக்கு பல முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் வாஷிங்டன் சுந்தரும் அஸ்வினுக்கு தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அதில், "ஒரு அணி வீரரை மட்டுமில்லை - ஆஷ் அண்ணா, நீங்கள் ஒரு உத்வேகம், வழிகாட்டி மற்றும் விளையாட்டின் உண்மையான சாம்பியனாக இருந்திருக்கிறீர்கள். உங்களுடன் மைதானத்தையும் டிரஸ்ஸிங் ரூமையும் பகிர்ந்து கொண்டது எனக்கு கிடைத்த பாக்கியம். தமிழ்நாட்டின் அதே மாநிலத்திலிருந்து வந்த நான், சேப்பாக்கத்தின் நெருங்கிய மூலைகளிலிருந்து உங்களை பார்த்து வளர்ந்தேன்.
உங்களுக்கு எதிராகவும் உங்களுடனும் விளையாடிய ஒவ்வொரு தருணமும் பாக்கியம். களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கற்றுக்கொண்டவை, நான் என்றென்றும் என்னுடன் எடுத்துச் செல்வேன். உங்களின் அடுத்தடுத்த செயல்பாடுகள் வெற்றியடையவும் மகிழ்ச்சியாகவும் இருக்க விரும்புகிறேன்' என்று பதிவிட்டிருந்தார்.
சுந்தரின் இந்த பதிவிற்கு தி கோட் படத்தின் கிளைமேக்சில் நடிகர் விஜய் சிவகார்த்திகேயனிடம் கூறிய வசனத்தை மாற்றி அஸ்வின் பதிலளித்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் அஸ்வின், "துப்பாக்கிய பிடிங்க வாஷி! அன்று இரவு நீங்கள் கெட் டுகெதரில் பேசிய 2 நிமிடம் சிறப்பாக இருந்தது." என பதிலளித்துள்ளார்.