இந்தியாவுக்காக மிகச்சிறந்த பவுலராக அஸ்வின் செயல்பட்டுள்ளார் - மிட்செல் ஸ்டார்க்
|இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்தார்.
மெல்போர்ன்,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்தார். சென்னையை சேர்ந்த 38 வயதான அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013-ம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தார்.
இந்திய அணிக்காக 106 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 537 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். மேலும் 116 ஒருநாள் போட்டியில் 156 விக்கெட்டும், 65 இருபது ஓவர் போட்டியில் 72 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார். இந்தியாவில் நடைபெற்ற பல டெஸ்ட் தொடர்களில் அணிக்கு தனி ஆளாக போராடி வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார்.
இதையத்து ஓய்வு பெற்ற அஸ்வினை பல முன்னாள் வீரர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவுக்காக மிகச்சிறந்த பவுலராக அஸ்வின் செயல்பட்டுள்ளார் என்றும், அஸ்வின் எப்போதும் எங்களுடைய அணிக்கு எதிராக முள்ளாக இருந்துள்ளார் என்றும் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
அஸ்வின் எப்போதும் எங்களுடைய அணிக்கு எதிராக இந்தியாவில் கொஞ்சம் முள்ளாக இருந்தார். அதே போல ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்ற தொடர்களில் அவரும் இந்திய அணியின் அங்கமாக இருந்தார். இது அற்புதமான கெரியர். அவருடைய கெரியர் கொண்டாடப்படும் என்று உறுதியாக சொல்வேன். அவருடைய சாதனைகள் அவரின் தரத்தை பேசும்.
இந்தியாவுக்காக நீண்ட காலமாக மிகச்சிறந்த பவுலராக செயல்பட்ட அவர் 500-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் விக்கெட்டுகள் எடுத்துள்ளார். நாதன் லயனும் அவரும் நெருக்கமான உறவை வைத்துள்ளார்கள்.
எங்கள் அணிகளுக்கு இடையே பரஸ்பர மரியாதையும் உள்ளது. திறமையான அவருக்கு அமைந்த இந்த கெரியருக்கு வாழ்த்துக்கள். இது அற்புதமான கெரியர். அது நல்ல வழியில் கொண்டாடப்படும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.