ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் படைக்க வாய்ப்புள்ள பிரமாண்ட சாதனை
|இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது.
பெர்த்,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் முதலாவது போட்டி நாளை தொடங்க உள்ளது. இந்த தொடர் இம்முறை ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்டதாக நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கடந்த 2 பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்களிலும் இந்தியாவே வென்றுள்ளது. இதனால் சொந்த மண்ணில் இந்தியாவின் ஹாட்ரிக் வெற்றி கனவை முறியடிக்க ஆஸ்திரேலியா முழு மூச்சுடன் களமிறங்க உள்ளது.
மறுமுனையில் இந்த தொடரில் குறைந்தபட்சம் 4-0 என்ற கணக்கில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான சூழலில் இந்தியா களமிறங்க உள்ளது. இதனால் இந்த டெஸ்ட் தொடர் எதிர்பார்ப்பை உள்ளாக்கியுள்ளது. இத்தகைய சூழலில் நாளை முதல் போட்டி தொடங்க உள்ளது.
இந்நிலையில் இந்த முதல் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் பிரமாண்ட சாதனை படைக்க வாய்ப்புள்ளது.
அதன் விவரம்:-
டெஸ்ட் கிரிக்கெட்டில் சுவாரசியத்தை அதிகரிக்கும் நோக்கில் ஐ.சி.சி. அறிமுகப்படுத்திய டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அஸ்வின் இதுவரை 194 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.
இந்த போட்டியில் இன்னும் 6 விக்கெட்டுகள் கைப்பற்றினால் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 200 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் வீரர் என்ற பிரமாண்ட உலக சாதனையை அவர் படைப்பார்.
இந்த பட்டியலில் 187 விக்கெட்டுகளுடன் நாதன் லயன் 2-வது இடத்திலும், கம்மின்ஸ் 175 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.