ஓய்வு அறிவித்த பின் முன்னாள் வீரர்களுடனான உரையாடல் குறித்து அஸ்வின் நெகிழ்ச்சி பதிவு
|சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பல முன்னாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சென்னையை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இவர் இந்திய அணிக்காக 106 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 537 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். மேலும் 116 ஒருநாள் போட்டியில் 156 விக்கெட்டும், 65 இருபது ஓவர் போட்டியில் 72 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார்.
அவருக்கு ஏராளமான முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்களும், ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஓய்வு பெற்ற நாளன்று தமக்கு முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் கபில் தேவ் ஆகியோர் நேரடியாக தொலைபேசியில் அழைத்து வாழ்த்திய ஸ்கிரீன் ஷாட்டை அஸ்வின் பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படத்துடன் அவர்களுடனான உரையாடல் குறித்து அஸ்வின் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளது பின்வருமாறு:- "25 வருடங்களுக்கு முன்பு யாராவது என்னிடம் நான் ஒரு ஸ்மார்ட் போன் வைத்திருப்பேன் என்றும், இந்திய கிரிக்கெட் வீரராக எனது கடைசி நாள் அழைப்பு பதிவு இப்படி இருக்கும் என்றும் சொன்னால், எனக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கும். நன்றி சச்சின் மற்றும் கபில்தேவ் பாஜி" என்று பதிவிட்டுள்ளார்.