< Back
கிரிக்கெட்
கேப்டனுடன் வாக்குவாதம்: மைதானத்தை விட்டு வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்
கிரிக்கெட்

கேப்டனுடன் வாக்குவாதம்: மைதானத்தை விட்டு வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்

தினத்தந்தி
|
7 Nov 2024 6:33 PM IST

பீல்டிங் செட் செய்யும்போது கேப்டனுக்கும், பந்துவீச்சாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

லண்டன்,

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 263 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 43 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது மட்டுமின்றி தொடரையும் கைப்பற்றியது.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேகப்பந்துவீச்சாளர் அல்ஜாரி ஜோசப் 10 ஓவர்கள் பந்துவீசி ஒரு மெய்டனுடன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதலாவது இன்னிங்ஸில் 4 வது ஓவரின் போது இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோர்டன் காக்ஸ் பேட்டிங் செய்துகொண்டிருந்தார். அப்போது அல்ஜாரி ஜோசப் பவுலிங் செய்யவந்தபோது இரண்டு பேர் ஸ்லிபில் இருந்தனர். அல்ஜாரி ஜோசப் முதல் பந்தை வெளியே வீசினார். பேட்டர் அதை அடிக்கவில்லை.

அடுத்த பந்தின் போது ஸ்லிப் இருந்த வீரரை பாய்ண்ட் திசையில் நிற்க வைத்துள்ளார் கேப்டன் ஹோப். இதனால், கேப்டனுக்கும், அல்ஜாரி ஜோசப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் அந்த ஓவரை மெய்டன் ஓவராக வீசினார். பீல்டிங் செட் செய்வது குறித்து கேப்டன் ஷாய் ஹோப்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அல்ஜாரி ஜோசப் எதுவும் தெரிவிக்காததால் பாதியிலேயே மைதானத்தைவிட்டு வெளியேறினார். பயிற்சியாளர் டேரன் ஷமி பவுண்டரி எல்லையில் இருந்து குரல் கொடுத்த போதும், அல்ஜாரி ஜோசப் கண்டுகொள்ளாமல் வெளியே சென்றார்.

அல்ஜாரி ஜோசப் மைதானத்தை விட்டு வெளியேறியதால் மேற்கிந்திய தீவுகள் அணியினர் மாற்றுவீரர் யாரும் களமிறங்க முடியாத சூழலால் அடுத்த ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் 10 வீரர்களுடன் விளையாடவேண்டிய கட்டாயத்தில் விளையாடினர். இதனால், பார்வையாளர்கள், நடுவர்கள் மத்தியில் குழப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்