< Back
கிரிக்கெட்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க வேண்டும் - தென் ஆப்பிரிக்க மந்திரி

Image Courtesy: AFP

கிரிக்கெட்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க வேண்டும் - தென் ஆப்பிரிக்க மந்திரி

தினத்தந்தி
|
10 Jan 2025 9:26 AM IST

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க வேண்டும் என தென் ஆப்பிரிக்க மந்திரி வலியுறுத்தி உள்ளார்.

கேப்டவுன்,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் பிப்ரவரி 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும் , முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன. பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை தென் ஆப்பிரிக்கா புறக்கணிக்க வேண்டும் என தென் ஆப்பிரிக்க விளையாட்டு துறை மந்திரி கெய்டன் மெக்கென்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, கிரிக்கெட் விளையாட்டு மூலம் இந்த உலகுக்கு, குறிப்பாக விளையாட்டுத் துறையில் உள்ள பெண்களுக்கு சொல்ல விரும்பும் செய்தி குறித்து கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா, பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கவனிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

உலகத்தில் நிறவெறி பேதம் அதிகம் இருந்த காலத்தில் விளையாட்டில் சமமான வாய்ப்பு மறுக்கப்பட்ட ஓர் இனத்தைச் சேர்ந்தவனாக இருக்கும் நான், இன்று உலகின் எந்தவொரு பகுதியிலும் பெண்களுக்கு எதிராக அதேபோன்ற அநீதி அரங்கேறும்போது, அதை வேறு விதமாகப் பார்ப்பது நியாயமானதாக இருக்காது.

தென் ஆப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டுமா அல்லது இல்லையா என்பது குறித்த இறுதி முடிவு எடுப்பது நான் அல்ல. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்பது எனது முடிவு. இறுதி முடிவு என்னுடையதாக இருந்தால், அது நிச்சயமாக நடக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்