அடிலெய்டு டெஸ்ட்: டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது ஏன்..? ரோகித் சர்மா விளக்கம்
|ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
அடிலெய்டு,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது. பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணியில் 3 மாற்றங்களாக துருவ் ஜூரெல், வாஷிங்டன் சுந்தர் மற்றும் படிக்கல் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக ரோகித் சர்மா, சுப்மன் கில் மற்றும் அஸ்வின் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இந்நிலையில் டாஸ் வென்ற பின் பேட்டிங் தேர்வு செய்ததற்கான காரணம் குறித்து ரோகித் சர்மா பேசியது பின்வருமாறு:- "நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய உள்ளோம். பிட்ச் தற்போது காய்ந்து இருக்கிறது. போதுமான புற்கள் இருக்கிறது. அது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவியை கொடுக்கலாம். ஆனால் போட்டி செல்ல செல்ல பேட்டிங் செய்வதற்கு நன்றாக இருக்கும்.
இதில் அனைவருக்கும் உதவி இருக்கலாம் என்பதால் நல்ல போட்டியாக அமையும். இரண்டு வார இடைவெளியில் பயிற்சிகளை எடுத்து நாங்கள் விளையாட தயாராக உள்ளோம். முதல் போட்டியை வெளியில் இருந்து பார்த்தது நன்றாக இருந்தது. இந்த பெரிய தொடரில் எங்களுக்கு சாதகமான முடிவுகளை பெறுவதில் கவனம்.
எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்களும் மகிழ்ச்சியுடன் தயாராக உள்ளனர். முதல் போட்டியில் பெற்ற வேகத்தை நாங்கள் தொடர விரும்புகிறோம். நான், கில், அஸ்வின் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்புகிறோம். இம்முறை நான் மிடில் ஆர்டரில் விளையாடுவது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும் அந்த சவாலுக்கு தயாராக உள்ளேன்" என்று கூறினார்.