அடிலெய்டு டெஸ்ட்: இந்திய பந்துவீச்சாளர்கள் தடுமாற காரணம் என்ன..? பயிற்சியாளர் விளக்கம்
|இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
அடிலெய்டு,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் நேற்று முன்தினம் தொடங்கியது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 44.1 ஓவர்களில் 180 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 87.3 ஓவர்களில் 337 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 140 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா முகமது சிராஜ் தலா 4 விக்கெட் கைப்பற்றினர்.
இதனையடுத்து 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 24 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 128 ரன்கள் எடுத்து போராடி வருகிறது. விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 28 ரன்களுடனும் நிதிஷ்குமார் ரெட்டி 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
முதல் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சில் தடுமாறிய ஆஸ்திரேலியா இம்முறை திறம்பட சமாளித்து வலுவான நிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்திய அணி இந்த போட்டியில் பந்துவீச்சில் தடுமாற காரணம் என்பது குறித்து பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், "முதல் நாளின் இரவில் எங்களுடைய லைன் கொஞ்சம் நன்றாக இருந்திருக்க வேண்டும். அந்த நேரத்தில் ஸ்விங் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக இருந்தது. ஆனால் இன்று காலை (அதாவது நேற்று) எங்களுடைய பவுலிங் கொஞ்சம் நன்றாகவே இருந்தது. இருப்பினும் டிராவிஸ் ஹெட் தம்முடைய வழியில் விளையாடி எங்களுடைய பவுலர்களை அழுத்தத்தில் தள்ளினார். முதல் போட்டியில் எங்களுடைய லைன், லென்த் அற்புதமாக இருந்தது.
அதுவே எஞ்சிய தொடர் முழுவதும் எங்களுடைய வழியாக இருக்கும். ஆனால் இந்தப் போட்டியில் நாங்கள் சரியான லென்த்தை கண்டறிய தவறி விட்டோம். அதே சமயம் வரலாற்றில் இரவு நேரங்களில் ஸ்டம்ப்புக்கு வெளியே வீசும்போது நிறைய விக்கெட்டுகள் கிடைக்கின்றன. அதை நாங்கள் பின்பற்றினோம். இன்று பகலில் சரியான இடத்தில் பந்து வீசினோம். இது போன்ற நாட்கள் வலியை கொடுத்தாலும் நீண்ட காலத் திட்டத்தில் எங்கள் வீரர்களுக்கு உதவியை கொடுக்கும்" என்று கூறினார்.