< Back
கிரிக்கெட்
இந்தியாவுக்கு எதிரான வெற்றிக்குப்பின் கம்மின்ஸ் கூறியது என்ன...?
கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான வெற்றிக்குப்பின் கம்மின்ஸ் கூறியது என்ன...?

தினத்தந்தி
|
8 Dec 2024 2:28 PM IST

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

அடிலெய்டு,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 180 ரன்களும், ஆஸ்திரேலியா 337 ரன்களும் அடித்தன. இதனையடுத்து 157 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 175 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 19 ரன்கள் மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் இந்த வெற்றியில் பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட் (140 ரன்கள்) மற்றும் பந்துவீச்சில் (8 விக்கெட்டுகள்) ஸ்டார்க் முக்கிய பங்கு வகித்தனர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில்,

"உண்மையிலேயே இந்த வாரம் மிகச்சிறப்பாக இருந்தது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தோல்வியை சந்தித்த நாங்கள் தற்போது மீண்டு வந்து வெற்றி பெற்றுள்ளோம். மிட்செல் ஸ்டார்க் இந்த போட்டியில் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார். எப்போதுமே அவர் எங்கள் அணிக்கு ஒரு முக்கிய வீரராக கடந்த 10 ஆண்டுகளாக இதை செய்து வருகிறார்.

அதேபோன்று பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட் இந்த மைதானத்தில் மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே இங்கு நிறைய ரன்களை குவித்திருக்கும் அவர் மீண்டும் இம்முறையும் இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். ஒரு அணியாக நாங்கள் இந்த போட்டியில் மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் இந்த வெற்றி கிடைத்தது" என்று கூறினார்.

மேலும் செய்திகள்