< Back
கிரிக்கெட்
அதிரடி சதம்: திலக் வர்மா குறித்து சூர்ய குமார் யாதவ் சொன்ன ரகசியம்
கிரிக்கெட்

அதிரடி சதம்: திலக் வர்மா குறித்து சூர்ய குமார் யாதவ் சொன்ன ரகசியம்

தினத்தந்தி
|
14 Nov 2024 8:51 AM IST

சதமடித்த திலக் வர்மா சர்வதேச டி20 போட்டியில் சதமடித்த 10 வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

செஞ்சூரியன்,

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியாவும், 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டி இருந்தது.

இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையலான 3-வது டி20 போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் தான் சந்தித்த 2-வது பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார்.

மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மாவுடன், திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டனர். 2-வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் சேர்த்த நிலையில் அபிஷேக் சர்மா அரை சதமடித்து ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னிலும், பாண்ட்யா 18 ரன்களிலும், ரிங்கு சிங் 8 ரன்களிலும் வெளியேறினர். அதிரடியைத் தொடர்ந்த திலக் வர்மா சதமடித்து அசத்தினார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. திலக் வர்மா 107 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்தது.

முதலில் களமிறங்கிய வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களின் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதையடுத்து களமிறங்கிய டேவிட் மில்லர் மற்றும் ஹென்ரிச் கிளாசென் நிதானமாக விளையாடினர். ஆனால் அந்த பார்ட்னர்ஷிப்பும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அந்த ஜோடியில் மில்லர் 18 ரன்களும், கிளாசென் 41 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். இறுதி கட்டத்தில் மார்கோ ஜான்சன் அதிரடியாக விளையாட தென் ஆப்பிரிக்க அணி கவுரமான நிலையை எட்டியது.

20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 208 ரன்கள் மட்டுமே எடுத்து 7 விக்கெட்டுகளை இழந்தது. இதன் மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக மார்கோ ஜான்சன் 54 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அர்ஷ்தீப்சிங் 3 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் 4 ஆட்டங்கள் கொண்ட போட்டியில் இந்தியா 2-1 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

போட்டிக்குப்பின்னர் செய்தியாளரிடம் பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், "இரண்டாவது டி20 போட்டிக்குப் பின்னர் திலக் வர்மா எனது அறைக்கு வந்து, மூன்றாவது இடத்தில் விளையாட வாய்ப்பு கொடுங்கள், நான் நன்றாக ஆட விரும்புகிறேன் என்று சொன்னார். தாராளமாக ஆடுங்கள் என்றேன். அவர் சொன்னதை செய்து விட்டார்" என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்