ஒரு வீரருக்கு ரசிகையின் காதல் கடிதம் - அஸ்வின் குறித்து மனைவி உருக்கம்
|அஸ்வின் ஓய்வு குறித்து அவரது மனைவி பிரீத்தி நாராயணன் உருக்கமாக பேசியுள்ளார்.
சென்னை,
கடந்த 14 வருடங்களாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக கோலாச்சி வந்த சென்னையை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். தற்போது நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் (5 போட்டிகள்) இடம்பெற்றிருந்த இன்னும் 2 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் திடீரென ஓய்வை அறிவித்துள்ளார்.
இது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் ஐ.பி.எல். தொடரில் சென்னை அணியில் அவர் விளையாட உள்ளார். ஓய்வு பெற்ற அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் உலகெங்கிலும் இருந்து குவிந்து வருகின்றன.
இந்நிலையில், அஸ்வினின் ஓய்வு குறித்து அவரது மனைவி பிரீத்தி நாராயணன் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''கடந்த இரண்டு நாட்களாக நான் என்ன சொல்லலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். எல்லா நேரத்திலும் பிடித்த கிரிக்கெட் வீரருக்கு மரியாதை செய்யும் விதமாக இந்த பதிவை போடுகிறேனா?
ஒருவேளை நான் அஸ்வினின் மனைவி என்ற கோணத்தை மட்டும் எடுத்துக் கொள்வேனா? அல்லது ஒரு கிரிக்கெட் வீரருக்கு ரசிகையின் காதல் கடிதமா? என்று தெரியவில்லை. ஆனால் இது எல்லாவற்றிலும் கலந்தது என்று நினைக்கிறேன்.
உலகம் முழுவதும் அனைத்து மைதானங்களுக்கும் உங்களுடன் வந்துள்ளேன். உங்களுக்காக எங்கும் நின்றுள்ளேன். நீங்கள் விளையாடுவதை அருகில் இருந்து பார்த்தது பாக்கியம். உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். நீங்கள் எனக்கு அறிமுகம் செய்துவைத்த உலகம்தான், நான் சிறுவயதில் இருந்தே விரும்பிய விளையாட்டை என்னை மிக அருகில் இருந்து பார்க்கவைத்தது.
கடந்த 13-14 ஆண்டுகளில் பல நினைவுகள் உள்ளன. பெரிய வெற்றிகள், தொடர்நாயகன் விருதுகள், ஆக்ரோஷமான ஆட்டத்துக்கு பிறகு அறையில் நிலவும் அமைதி, தனது எண்ணங்களை ஒரு காகிதத்தில் பென்சிலால் எழுதுவது, போட்டி திட்டத்தை மேற்கொள்வதற்காக இடைவிடாமல் கிரிக்கெட் வீடியோக்களை பார்த்து கொண்டு இருப்பது, போட்டிக்கு செல்லும் முன்பு மூச்சு பயிற்சி செய்வது, சில பாடல்களை இடைவிடாமல் கேட்பது, சில வெற்றிகளுக்கு பின்னால் இருந்த கண்ணீர் என்று சொல்லிக்கொண்டே போகலாம். குறிப்பாக சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டி (2013), மெல்போர்ன் கிரிக்கெட் போட்டியின் வெற்றி, சிட்னி போட்டி டிரா, காபா போட்டியின் வெற்றி, டி20 போட்டிக்கான அணியில் மீண்டும் இடம் பிடித்தது உள்ளிட்ட சமயங்களில் தங்களது மனநிலையை நான் அறிவேன்.
உங்களது சுமையை இறக்கி வைப்பதற்கான நேரம் இதுதான். உங்களுக்கான நேரத்தை ஒதுக்குங்கள். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள். நாள் முழுவதும் மீம்ஸ்களை அனுப்புங்கள். பந்துவீச்சில் புதிய பரிணாமத்தை உருவாக்குங்கள். எதுவுமே செய்யாமல் சும்மா இருக்க சிறிது நேரம் ஒதுக்குங்கள்'' என்று பதிவிட்டுள்ளார்.