< Back
கிரிக்கெட்
இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட்: டிராவிஸ் ஹெட் விளையாடுவாரா..? பயிற்சியாளர் தகவல்
கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட்: டிராவிஸ் ஹெட் விளையாடுவாரா..? பயிற்சியாளர் தகவல்

தினத்தந்தி
|
24 Dec 2024 4:53 PM IST

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின்போது டிராவிஸ் ஹெட் காயமடைந்தார்.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. 3 டெஸ்ட் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற இரு அணிகளும் முழு மூச்சுடன் போராடும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

முன்னதாக இந்த தொடரில் ஆஸ்திரேலியா தரப்பில் டிராவிஸ் ஹெட்டின் பேட்டிங் இந்திய அணிக்கு தலைவலியாக உள்ளது. அவர் 3 போட்டிகளின் முடிவில் 2 சதங்கள் உட்பட 409 ரன்கள் குவித்துள்ளார். இவரது ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய பவுலர்கள் தடுமாறி வருகின்றனர்.

இதனிடையே கடந்த போட்டியின்போது டிராவிஸ் ஹெட் காயமடைந்தார். இதனால் இந்தியாவின் 2-வது இன்னிங்சின்போது அவர் பீல்டிங் செய்ய வரவில்லை. இதனால் இவர் பாக்சிங் டே போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்தது. மேலும் 4-வது போட்டிக்கான பயிற்சியிலும் அவர் ஈடுபடவில்லை என்று கூறப்பட்டது.

இந்நிலையில் டிராவிஸ் ஹெட் குறித்து ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் மெக்டொனால்டு முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "தற்போது அவர் நன்றாக இருப்பதாக நினைக்கிறேன். இன்று பயிற்சி மேற்கொண்டார். இதனால் அவர் 4-வது போட்டிக்கு தயாராக இருப்பதாகவே நான் உணர்கிறேன். இருப்பினும் நாங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை" என்று கூறினார்.

இதன் மூலம் டிராவிஸ் ஹெட் 4-வது போட்டியில் விளையாடுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

மேலும் செய்திகள்