கடைசி டி20 போட்டி: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்திய அணி
|இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட் வீழ்த்தினார்.
ஜோகன்னஸ்பர்க்,
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 4-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வான்ரர்ஸ் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா களமிறங்கினர். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை அடித்து நொறுக்கிய இந்த ஜோடி ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் 73 ரன்கள் அடித்த நிலையில் பிரிந்தது. அபிஷேக் சர்மா 18 பந்துகளில் 36 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் திலக் வர்மா களமிறங்கினார்.
சாம்சனுடன் ஜோடி சேர்ந்து திலக் வர்மாவும் அதிரடியாக விளையாட இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென எகிறியது. வெறும் 8.3 ஓவர்களிலேயே இந்தியா 100 ரன்களை கடந்தது. சாம்சன் 28 பந்துகளில் அரைசதம் அடித்தார். கடந்த 2 ஆட்டங்களில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்த அவர் இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்.
முந்தைய ஆட்டத்தின் ஹீரோவான திலக் வர்மாவும் சிக்சரும் பவுண்டரியுமாக விளாசி வெறும் 22 பந்துகளில் அரைசதம் விளாசினார். இவர்களின் அதிரடி ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தென் ஆப்பிரிக்க பவுலர்கள் திணறினர். 17-வது ஓவரில் இருவரும் தங்களது சதத்தை பதிவு செய்தனர். இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்த இந்தியா 283 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 109 ரன்களும், திலக் வர்மா 120 ரன்களும் குவித்தனர்.
இதனையடுத்து 284 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. முதலில் களமிறங்கிய வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொப்ப ரன்களின் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதையடுத்து களமிறங்கிய டிரிஸ்டான் ஸ்டப்ஸ் மற்றும் டேவிட் மில்லர் நிதனமாக விளையாடினர். ஆனால் அந்த பார்ட்னர்ஷிப்பும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை.. மில்லர் 36 ரன்களும், ஸ்டப்ஸ் 43 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.
இறுதியில் 18.2 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 148 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 135 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக டிரிஸ்டான் ஸ்டப்ஸ் 43 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அர்ஷ்தீப்சிங் 3 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி, அக்சர் பட்டேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.