3-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 267 ரன்களில் ஆல் அவுட்.. பாகிஸ்தான் தடுமாற்றம்
|பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சஜீத் கான் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
ராவல்பிண்டி,
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 823 ரன்கள் குவித்து சாதனை படைத்ததுடன் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பெற்றது. 2-வது டெஸ்டில் சுழல் ஜாலத்தால் மிரட்டிய பாகிஸ்தான் 152 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டு, தொடரை 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்தது.
இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.
தொடக்க ஆட்டக்காரர்களான ஜாக் கிராலி 29 மற்றும் பென் டக்கெட் 52 ரன்கள் அடித்து ஒரளவு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்த போதிலும் பின்வரிசை வீரர்கள் சொதப்பினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரூட் (5 ரன்), ஸ்டோக்ஸ் (12 ரன்), சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
இறுதி கட்டத்தில் ஜேமி சுமித் பொறுப்புடன் விளையாடி (89 ரன்கள்) அணி வலுவான நிலையை எட்ட உதவினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த கஸ் அட்கின்சன் 39 ரன்கள் அடித்தார். முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 267 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜேமி சுமித் 89 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சஜீத் கான் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. அப்துல்லா ஷபிக் 14 ரன்களிலும், சைம் அயுப் 19 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்துள்ள பாகிஸ்தான் 73 ரன்களுடன் தடுமாறி வருகிறது. ஷான் மசூத் 16 ரன்களுடனும், சவுத் ஷகீல் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.