< Back
கிரிக்கெட்
இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: சதம் விளாசிய ஸ்டீவன் சுமித்

Image Courtacy: ICCTwitter

கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: சதம் விளாசிய ஸ்டீவன் சுமித்

தினத்தந்தி
|
15 Dec 2024 12:35 PM IST

இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட்டில் அதிக சதம் விளாசியவர் என்ற ஜோ ரூட்டின் (10) சாதனையை ஸ்டீவன் சுமித் சமன் செய்தார் .

பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியாவும், அடிலெய்டில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலிய அணி 5.3 ஓவர்களின் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்திருந்தபோது திடீரென மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி பாதிக்கப்பட்டது.

அரை மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் போட்டி தொடங்கியது. ஆட்டத்தின் 13-வது ஓவரை ஆகாஷ்தீப் வீசினார். அப்போது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் மீண்டும் தடைபட்டது. மழை விடாமல் தொடர்ந்து பெய்தது. இதனால், முதல் நாள் ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக நடுவர்கள் அறிவித்தனர்.

அப்போது ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்திருந்தது. அதில் கவாஜா 19 ரன்களுடனும், மெக்ஸ்வீனி 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர் . இந்த நிலையில், 2வது நாள் ஆட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் வழக்கமான நேரத்தை விட முன்கூட்டியே இன்று ஆட்டம் தொடங்கியநிலையில், ஆஸ்திரேலியா அணியின் சார்பில் களமிறங்கிய உஸ்மான் கவாஜா 21 ரன்களும், மெக்ஸ்வீனி 9 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய லபுசனே 12 ரன்களில் கேட்ச் ஆனார்.

அடுத்ததாக ஸ்டீவன் சுமித் மர்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். நிதானமாக ரன் சேர்ந்த இந்த ஜோடியில் ஸ்டீவன் சுமித் தனது அரை சதத்தை பதிவு செய்தார்.

இந்தசூழலில் அடிலெய்டு டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து காபாவிலும் இந்திய அணிக்கு எதிராக ஆஸ்ரேலியா வீரர் டிராவிஸ் ஹெட் சதம் விளாசினார். முன்னதாக இம்மைதானத்தில் கடந்த 3 இன்னிங்ஸ்களில் டிராவிஸ் ஹெட் ( 0(1), 0 (1), 0 (1) ) டக் அவுட் ஆகியிருந்தார்.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட்டில் அதிக சதம் விளாசியவர் என்ற ஜோ ரூட்டின் (10) சாதனையை ஸ்டீவன் சுமித் சமன் செய்தார்.

இதன்படி கடந்த 25 இன்னிங்ஸ்களில் முதல் சதத்தை விளாசி சுமித் சாதனை படைத்துள்ளார். கடைசியாக ஆஷஸ் தொடரில் சதம் விளாசிய அவர், ஓராண்டுக்கும் மேலாக சதமடிக்க முடியாமல் தடுமாறி வந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய சுமித் 190 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து பும்ராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதேபோல் மறுமுனையில் அதிரடி காட்டி வந்த டிராவிஸ் ஹெட் 160 பந்துகளில் 152 ரன்கள் சேர்த்து பும்ரா பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.

தற்போது அலெக்ஸ் கேரி 16 ரன்களும், கேப்டன் பேட் கம்மின்ஸ் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்ரேலியா அணி தற்போது 92 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் சார்பில் பும்ரா 5 விக்கெட்டுகளும், நிதிஷ் குமார் ரெட்டி 1 விக்கெட்டும் எடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்