< Back
கிரிக்கெட்
3-வது டி20 போட்டி: கடைசி ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே

image courtesy:twitter/@ZimCricketv

கிரிக்கெட்

3-வது டி20 போட்டி: கடைசி ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே

தினத்தந்தி
|
5 Dec 2024 8:50 PM IST

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

புலவாயோ,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவிலேயே பாகிஸ்தான் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்ப்ற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வேயின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் கேப்டன் சல்மான் ஆகா ஒரளவு சமாளித்து ஆடி அணி கவுரமான நிலையை எட்ட உதவினார். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பாகிஸ்தான் 132 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சல்மான் 32 ரன்கள் அடித்தார். ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக முசரபானி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 133 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியும் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் தொடக்க ஆட்டக்காரர் ஆன பிரையன் பென்னட் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தார். இருப்பினும் கடைசி கட்டத்தில் அவர் ஆட்டமிழந்ததும் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

ஜிம்பாப்வே அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரை ஜஹந்தத் கான் வீசினார். அந்த ஓவரின் முதல் 2 பந்துகளிலேயே 10 ரன்கள் அடித்த மபோசா 3-வது பந்தில் 1 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

அடுத்த பந்தில் தஷிங்கா முசெகிவாவும் ஆட்டமிழக்க ஆட்டத்தில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் 5-வது பந்தை எதிர்கொண்ட யங்கரவா 1 ரன் அடித்து ஜிம்பாப்வே அணிக்கு திரில் வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

முடிவில் 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாப்வே 133 ரன்கள் அடித்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பிரையன் பென்னட் 43 ரன்கள் அடித்தார்.

இதன் மூலம் 3 போட்டிகள் டி20 தொடரை பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

மேலும் செய்திகள்