< Back
கிரிக்கெட்
3வது டி20; ஆப்கானிஸ்தான் அபார பந்துவீச்சு...ஜிம்பாப்வே 127 ரன்களில் ஆல் அவுட்

Image Courtesy: @ACBofficials

கிரிக்கெட்

3வது டி20; ஆப்கானிஸ்தான் அபார பந்துவீச்சு...ஜிம்பாப்வே 127 ரன்களில் ஆல் அவுட்

தினத்தந்தி
|
14 Dec 2024 7:12 PM IST

ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக பிரையன் பென்னட் 31 ரன்கள் எடுத்தார்.

ஹராரே,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணியும், 2வது போட்டியில் ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்றன.

இந்நிலையில், தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து ஜிம்பாப்வேயின் தொடக்க ஆட்டக்காரர்களாக தடிவானாஷே மருமணி மற்றும் பிரையன் பென்னட் களம் இறங்கினர்.

இதில் பிரையன் பென்னட் ஒருபுறம் நிலைத்து நின்று ஆடினார். மறுபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. இதில் தடிவானாஷே மருமணி 6 ரன்னிலும், அடுத்து வந்த டியான் மியர்ஸ் 13 ரன்னிலும், வெஸ்லி மாதேவேரே 21 ரன்னிலும் அவுட் ஆகினர். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய பிரையன் பென்னட் 31 ரன்னில் அவுட் ஆனார்.

இதையடுத்து களம் இறங்கிய ஜிம்பாப்வே வீரர்கள் ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதில் சிக்கந்தர் ராசா 6 ரன், பராஸ் அக்ரம் 6 ரன், தஷிங்கா முசெகிவா 12 ரன், ரிச்சர்ட் ங்கரவா 1 ரன், வெலிங்டன் மசகட்சா 17 ரன் எடுத்து அவுட் ஆகினர்.

இறுதியில் ஜிம்பாப்வே 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 127 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக பிரையன் பென்னட் 31 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான் 4 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 128 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் ஆட உள்ளது.

மேலும் செய்திகள்