< Back
கிரிக்கெட்
390 ரன்கள்... வரலாறு படைத்த வங்காள மகளிர் அணி
கிரிக்கெட்

390 ரன்கள்... வரலாறு படைத்த வங்காள மகளிர் அணி

தினத்தந்தி
|
24 Dec 2024 2:10 AM IST

குஜராத்தில் நடந்த போட்டியில் 390 ரன்கள் என்ற அதிகபட்ச இலக்கை எட்டி வங்காள மகளிர் கிரிக்கெட் அணி வரலாறு படைத்துள்ளது.

ராஜ்கோட்,

குஜராத்தின் ராஜ்கோட் நகரில் நிரஞ்சன் ஷா ஸ்டேடியத்தில் சீனியர் மகளிர் கோப்பை 2024 கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில், அரியானா மகளிர் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 389 ரன்கள் குவித்தது.

இதனால், 390 என்ற வெற்றி இலக்கை நோக்கி வங்காள மகளிர் அணி விளையாடியது. அந்த அணி தொடக்கத்தில் இருந்து அடித்து ஆடியது. இதனால், 5 பந்துகள் மீதம் இருந்த சூழலில், 390 ரன்களை எடுத்து, வெற்றி இலக்கை அடைந்து வரலாறும் படைத்துள்ளது.

ஒரு நாள் போட்டியில் இதற்கு முன்பு, 2019-ம் ஆண்டு நியூசிலாந்தில் நடந்த உள்ளூர் போட்டியில் கேன்டர்பரிக்கு எதிராக விளையாடிய நார்தன் டிஸ்டிரிக்ட்ஸ் அணி 309 ரன்கள் என்ற இலக்கை எட்டியதே இதுவரை சாதனையாக இருந்து வந்தது. இந்நிலையில், இந்த சாதனையை வங்காள அணி முறியடித்து உள்ளது.

சர்வதேச அளவில், நடப்பு ஆண்டு தொடக்கத்தில், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், 305 ரன்கள் என்ற இலக்கை எட்டி இலங்கை வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது.

மேலும் செய்திகள்