< Back
கிரிக்கெட்
2-வது டெஸ்ட்: ஆடுகளம் எப்படி இருந்தாலும் இந்தியாவை வீழ்த்துவோம் - நியூசிலாந்து வீரர் சவால்
கிரிக்கெட்

2-வது டெஸ்ட்: ஆடுகளம் எப்படி இருந்தாலும் இந்தியாவை வீழ்த்துவோம் - நியூசிலாந்து வீரர் சவால்

தினத்தந்தி
|
22 Oct 2024 9:17 PM IST

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது.

புனே,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் பெங்களூருவில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என நியூசிலாந்து முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி வரும் 24ம் தேதி புனேவில் தொடங்குகிறது.

இதனிடையே புனே மைதானத்தில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக மெதுவான ஆடுகளத்தை பிசிசிஐ அமைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டால் அது குறித்து தங்களுக்கு கவலை இல்லை என நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் கூறி உள்ளார். மேலும் ஆடுகளம் எவ்வாறாயினும் இந்தியாவை வீழ்த்துவோம் என்று அவர் சவால் விடுத்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து நியூசிலாந்து அணியின் வீரர் டேரில் மிட்செல் கூறுகையில், "ஆடுகளம் எப்படியாக இருந்தாலும் அதை எங்களால் மாற்ற முடியாது என்பது உண்மை. ஆடுகளம் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் ஆனால் நாங்கள் 20 விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கான வழிகளை கண்டுபிடித்து வந்து செயல்படுவோம். மேலும் பேட்டிங்கில் ரன்களையும் எடுப்போம்.

பெங்களூர் டெஸ்ட் போட்டி கடந்த காலத்தில் இருக்கிறது அது முடிந்துவிட்டது. நாங்கள் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக தயாராகி வருகிறோம். முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதற்காக நான் நன்றி உள்ளவனாக இருக்கிறேன். மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஒரு புதிய போட்டி மற்றும் ஒரு புதிய ஆடுகளம். இங்கு சவால் வித்தியாசமானதாக இருக்கும். எனவே நாங்கள் சென்று எங்கள் வழியில் விளையாடுவோம்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்