2-வது டெஸ்ட்: கில் வேண்டாம்.. அந்த இளம் வீரரே அணியில் தொடரட்டும் - ஹர்பஜன் சிங் ஆலோசனை
|இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி 6-ம் தேதி நடைபெற உள்ளது.
அடிலெய்டு,
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வருகிற 6-ந்தேதி (பகல்-இரவு போட்டி) தொடங்குகிறது.
இந்த போட்டியில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் வருவதால் பேட்டிங் வரிசையில் மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காயத்திலிருந்து குணமடைந்த கில் ஆஸ்திரேலிய பிரதமர் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் 50 ரன்கள் அடித்தார். எனவே அவர் 2-வது போட்டியில் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இவர்களின் வருகையால் முதல் போட்டியில் விளையாடிய துருவ் ஜூரெல் மற்றும் படிக்கலின் இடம் காலியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் 2வது போட்டியில் சுப்மன் கில்லுக்கு பதிலாக துருவ் ஜூரெல் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ரோகித் சர்மா 5வது அல்லது 6வது இடத்தில் விளையாடுவதை நான் பார்க்க போவதில்லை. ஒன்று ரோகித் - ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாட வேண்டும். அல்லது ராகுல் 3, 4வது இடங்களில் விளையாட வேண்டும். 6வது இடத்தில் ரோகித் சர்மா விளையாடுவது இந்திய அணிக்கு சிறப்பாக இருக்காது.
ஏனெனில் நம்முடைய டாப் பேட்ஸ்மேன்கள்தான் ஆஸ்திரேலியாவில் வெற்றிக்கான தூண்கள். என்னை கேட்டால் ராகுல் - ஜெய்ஸ்வால் தொடர்ந்து தொடக்க வீரர்களாக விளையாடலாம். ரோகித் சர்மா 3-வது இடத்திலும், விராட் கோலி 4-வது இடத்திலும் விளையாட வேண்டும். சுப்மன் கில் தம்முடைய வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும்.
முதல் போட்டியில் பெரிய ரன்கள் குவிக்காத படிக்கலை நீங்கள் இந்த போட்டியில் வெளியே உட்கார வைக்கலாம். அப்படி செய்தால் சுப்மன் கில் 3-வது வரிசையில் விளையாடாமல் 5-வது இடத்தில் விளையாடும் வாய்ப்பை பெறுவார். அதனால் துருவ் ஜூரெலுக்கு பதிலாக சுப்மன் கில்லை இந்திய அணி விளையாட வைப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் ஜூரெலுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்" என கூறினார்.