< Back
கிரிக்கெட்
2வது டெஸ்ட்; இந்திய ஏ அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா ஏ அபார வெற்றி

கோப்புப்படம்

கிரிக்கெட்

2வது டெஸ்ட்; இந்திய ஏ அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா ஏ அபார வெற்றி

தினத்தந்தி
|
9 Nov 2024 2:45 PM IST

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா ஏ கைப்பற்றியது.

மெல்போர்ன்,

இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகள் இடையிலான 2-வது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டி(4 நாள் ஆட்டம்) மெல்போர்னில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய ஏ அணியின் கேப்டன் நாதன் மெக்ஸ்வீனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணி தனது முதல் இன்னிங்சில் 161 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியா ஏ தரப்பில் கெய்க்வாட் மற்றும் ராகுல் தலா 4 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

ஆஸ்திரேலிய தரப்பில் நேசர் 4 விக்கெட்டுகளும், வெப்ஸ்டர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா ஏ முதல் நாளில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 53 ரன்கள் அடித்திருந்தது. இந்நிலையில், நேற்று 2வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஏ தனது முதல் இன்னிங்சில் 223 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது.

ஆஸ்திரேலியா ஏ தரப்பில் மார்கஸ் ஹாரிஸ் 74 ரன்கள் எடுத்தார். இதையடுத்து இந்தியா ஏ தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. இந்தியா ஏ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஈஸ்வரன் 17 ரன்னிலும், ராகுல் 10 ரன்னிலும், அடுத்து வந்த சாய் சுதர்சன் 3 ரன்னிலும், கெய்வகாட் 11 ரன்னிலும், தேவ்தத் படிக்கல் 1 ரன்னிலும் அவுட் ஆகினர்.

தொடர்ந்து துருவ் ஜூரெல் மற்றும் நிதிஷ்குமார் ரெட்டி ஜோடி சேர்ந்தனர். இறுதியில் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா ஏ தனது 2வது இன்னிங்சில் 31 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 73 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா ஏ தனது 2வது இன்னிங்சில் 229 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்தியா ஏ தரப்பில் அதிகபட்சமாக துருவ் ஜூரெல் 68 ரன் எடுத்தார். இதையடுத்து 168 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா ஏ 47.5 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 169 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா ஏ கைப்பற்றியது.

மேலும் செய்திகள்