நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்; பண்ட், கில் விளையாடுவார்களா..? - பயிற்சியாளர் பதில்
|இந்தியா - நியூசிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 24ம் தேதி புனேவில் தொடங்குகிறது.
புனே,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் பெங்களூருவில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என நியூசிலாந்து முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி வரும் 24ம் தேதி புனேவில் தொடங்குகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் காயம் காரணமாக சுப்மன் கில் இடம் பெறவில்லை. அதேபோல் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டும் கடந்த ஆட்டத்தில் முழங்காலில் காயத்தை சந்தித்தார். ஆனால், அவர் அதையும் தாண்டி இந்தியாவுக்காக பேட்டிங் மட்டும் செய்தார். இருப்பினும் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை.
இந்நிலையில் அந்த 2 வீரர்களும் தற்போது குணமடைந்து விளையாடுவதற்கு தயாராக உள்ளதாக இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டஸ்சேட் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, அனைவரும் நன்றாக உள்ளனர். முதல் டெஸ்ட் போட்டியில் அதிக பவுலிங் இல்லை.
அதனால் வேகப்பந்து வீச்சாளர்கள் நன்றாக உள்ளனர். ரிஷப் பண்ட் நல்லபடியாக இருக்கிறார். கடந்த போட்டியில் அவர் தன்னுடைய முழங்கால் அசைப்பதில் கொஞ்சம் அசவுகரியத்தை கொண்டிருந்தார். இருப்பினும் அவருக்காக காத்திருக்கிறோம்.
2வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு அவர் நன்றாக இருக்கிறார். சுப்மன் கில்லும் நன்றாக தெரிகிறார். அவர் பெங்களூருவில் சில பயிற்சிகளை எடுத்தார். அவரும் கழுத்துப் பகுதியில் கொஞ்சம் அசவுகரியத்தை கொண்டிருந்தார். தற்போது ஓரளவு நன்றாக இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.