நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து
|நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 125 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
வெலிங்டன்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயனம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் முதலில் இங்கிலாந்தை பேட் செய்ய பணித்தார்.
அதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 54.4 ஓவர்களில் 280 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹாரி புரூக் 123 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் நாதன் சுமித் 4 விக்கெட்டுகளும், வில்லியம் ஓ ரூர்கே 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி நேற்றைய முடிவில் 5 விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்து தடுமாறியது. டாம் பிளண்டெல் 7 ரன்களுடனும், வில்லியம் ஓரூர்க் ரன் எதுவுமின்றியும் களத்தில் இருந்தனர்.
2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 125 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக வில்லியம்சன் 37 ரன்கள் அடிக்க, இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் மற்றும் பிரைடன் கார்ஸ் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.
இதனையடுத்து 155 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜாக் கிராலி 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்த போதிலும், பென் டக்கெட் - ஜேக்கப் பெத்தேல் வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இருவரும் சதத்தை நெருங்கிய தருவாயில் பென் டக்கெட் 92 ரன்களிலும், ஜேக்கப் பெத்தேல் 96 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் களமிறங்கிய வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இங்கிலாந்து அணி வலுவான நிலையை எட்டியுள்ளது.
2-வது நாள் முடிவில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகளை இழந்து 378 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் இங்கிலாந்து 533 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. ஜோ ரூட் 73 ரன்களுடனும், ஸ்டோக்ஸ் 35 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஹாரி புரூக் 55 ரன்களில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து தரப்பில் டிம் சவுதி மற்றும் மேட் ஹென்ரி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளனர்.
நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.