2-வது டி20 போட்டி: ஹாட்ரிக் சிக்சருடன் சதத்தை நிறைவு செய்த அபிஷேக் சர்மா
|இந்தியா - ஜிம்பாப்வே இடையிலான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
ஹராரே,
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் 13 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி கண்டது.
இதையடுத்து 2வது டி20 போட்டி ஹராரேவில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் சுப்மன் கில் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இதன்பின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன அபிஷேக் சர்மாவுடன், கெய்க்வாட் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அறிமுக போட்டியில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்த அபிஷேக் சர்மா இந்த ஆட்டத்தில் முதலில் நிதானமாக ஆடி அரைசதம் அடித்தார்.
அதன்பின் அதிரடியில் வெளுத்து வாங்கிய அவர் 82 ரன்களில் இருந்தபோது ஹாட்ரிக் சிக்சர் அடித்து தனது முதலாவது சர்வதேச சதத்தை நிறைவு செய்தார். சதம் அடித்த அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். முதல் 33 பந்துகளில் 53 ரன்கள் அடித்த அவர், அடுத்த 13 பந்துகளில் 47 ரன்கள் குவித்து தனது சதத்தை நிறைவு செய்துள்ளார்.
தற்போது வரை இந்திய அணி 16 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 165 ரன்கள் குவித்துள்ளது.