கிரிக்கெட்
2வது ஒருநாள் போட்டி; ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான்

Image Courtesy: AFP

கிரிக்கெட்

2வது ஒருநாள் போட்டி; ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான்

தினத்தந்தி
|
8 Nov 2024 3:10 PM IST

பாகிஸ்தான் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஹாரிஸ் ரவுப் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அடிலெய்டு,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான் 2வது ஒருநாள் போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, பாகிஸ்தானின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி 35 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 163 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 35 ரன் எடுத்தார்.

பாகிஸ்தான் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஹாரிஸ் ரவுப் 5 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 164 ரன் என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் களம் புகுந்தது.பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக சைம் அயூப் மற்றும் அப்துல்லா ஷபீக் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இந்த இணையை பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் திணறினர். நிதானமாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

இதில் சைம் அயூப் 82 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். தொடர்ந்து பாபர் அசாம் களம் இறங்கினார். இறுதியில் பாகிஸ்தான் 26.3 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 169 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி போட்டி வரும் 10ம் தேதி பெர்த்தில் நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்